சோமாலிய நாட்டுத் தமிழறிஞன்










தொலைபேசியை காதில் வைத்தவுடனேயே புரிந்தது மறுபக்கத்தில் பேசுபவர் எந்த ஊர் என்பது. தனது பிரின்டர் வேலை செய்யவில்லை என்றும் உடனே வா என்றும் சொல்லி விலாசமும் தந்தார். போய் இறங்கினேன்.. கண்டதும் கைகுலுக்கி அவர் முதலில் கேட்டது நீ சோமாலிய நாட்டவனா என்று...

ஆகா... என்றது என் மனது. அவனுக்கு நான் தமிழன் என்று பதில் சொல்லி, வேண்டுமென்றே கேட்டேன் நீங்கள் எந்த ஊர் என்று? சோமாலி லான்ட் என்று சற்று வித்தியாசமாகச் சொன்னான்.

நமக்கும் அவர்களுக்குமான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது.. என்பதை இன்றைய சந்திப்பும் உறுதிசெய்தது.

மனிதனுக்கு 40க்குள் தான் வயதிருக்கும்.
நீண்டு ஒடுங்கிய தேகம், சுறுட்டை சுறுட்டையாய் தலையில் சிறிது மயிர்

வீட்டுக்குள் போனதும் குஞ்சு குறுமன், சிறுசு , பெருசுமாய் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது வீடு. எண்ணிக்கையை சொல்ல ஏலாத அளவுக்கு திருவிழாக் கூட்டமாய் இருந்தது.

வெளியாள் வந்திருப்பதை அவர்கள் கவனிப்பதாய் இல்லை. சண்டையிடிக்கும் குழந்தைகளும், அதட்டியடக்கும் தாயும், அதையும் மீறி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் சிறுசுகளுமாய் வீடு அல்லோகல்லப்பட்டுக்கொண்டிருந்
தது. காட்டப்பட்ட கதிரையில் உட்கார்ந்தேன்.

என் பெயர் (f)வன்னி என்றும் நீ யார் என்றும் கேள்விகளை வீசினாள் சிறிய குடுமிகளாய் தலைமயிரை கட்டியிருந்த ஒரு பெண் குழந்தை. அவளின் அதிகாரத் தோரணை எனது இளைய மகளை நினைவூட்டியது. நான் பதில் சொல்ல முயற்சிக்க முதலே அங்காலே போ என்று தொனியில் அவளுக்கு கட்டளையிட்டார் தகப்பன்.

அவரின் கதையை ஒரு காதால் உள் வாங்கி மறு காதால் வெளியே விட்டபடி அவள் என்னருகே நின்றிருக்க... நீ எந்த ஊர் என்று கேட்டபடியே அருகில் வந்தான் ஒரு சிறுவன்.

நான் சிறிலங்கா என்றதும், தனது நன்பனும் உனது ஊர் தான் என்றும். தனக்கு தமிழ் தெரியும் என்றும் சொல்லியவன் என்னைப் பார்த்து
”குண்டி” என்றால் என்ன என்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியொன்றைக் கேட்டான்..
சற்று ஆடித்தான் போனேன் அவனின் தாக்குதலால்.
பதிலை யோசித்துக் கொண்டிருந்த போது அதன் அர்த்தம் ”ரும்பா” என்றான் நோர்வேஜிய மொழியில்..
சிரித்து வைத்தேன்..
தமிழ் பரவும் விதத்தை நினைத்த போது சிரிப்பு வந்தது.

அவனின் முகம் முழுவதும் சிராய்ப்புக் காயங்களாக இருந்தது. என்ன நடந்தது என்ற போது சைக்கில் ஓடீ விழுந்ததாயும்.. பெரிதாய் நொந்ததால் தான் அழுதாயும் சொன்னான்.


உன்னிடம் சைக்கில் இருந்ததா என்றான் என்னைப் பார்த்து. ஆம் என்றேன்.
விழுந்திருக்கிறாயா என்றான் அதற்றகும் ஒம் என்றேன்
காயங்களைக் காட்டு என்றான்.
உன் சைக்கி்ல் என்ன நிறம்?
எவ்வளவு பெரிது?
இப்போது எங்கிருக்கிறது என்று அடுக்கிக் கொண்டே போனான்

தகப்பன் அவனை பலவந்தமாக வெளியேற்றும் வரை.

கணணியுடனும் பிரின்டருடனும் வேலை செய்துகொண்டிருந்தேன்


எங்கள் பேச்சு நாடு, கல்வி, தொழில் என்று அலைந்தது
தான் பேரூந்து சாரதி என்றும், 28ம் நம்பர் பேரூந்து ஓடுவதாயும் சொன்னார்..குழந்தைகளின் தந்தை.
அவர் ஓடும் பாதையில் ஒரு பகுதி புதுப்பிக்கப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து chaos நிலவுகின்றது என்றும் பேசிக் கொண்டிருந்தபோது
முன்பு என்னுடன் பேசிய சிறுவன் என்னிடம் chaos என்றால் என்ன என்றான் நோர்வேஜிய மொழியில்...


8 வயதுச்சிறுவனுக்கு இந்தச் சொல்லை எப்படி விளங்கவைப்பது என்று யோசித்தேன்...
தகப்பன் இவன் ஒரு அதிகப்பிரசங்கி என்றார்.
என்னை அவனின் ஆர்வம் கவர்ந்ததால் பதில் சொல்ல முயற்சித்தேன்
ஒழுங்கில்லாத, குழப்பமான என்ற தொனியில் அதன் அர்த்தத்தை அவனுக்குத் விளக்கினேன்.
அதன் பின் chaos, chaos என்று பல தடவைகள் சொல்லிக் கொண்டிருந்தான். சொல்லின் அர்த்தம் புரிந்திருக்குமோ அவனுக்கு?


Printer driver டவுன்லோட் பண்ண போட்டேன் 33 நிமிடங்கள் தேவை என்றது கணணி.
அருகில் வந்தாள் பலவந்தமாக அனுப்பப்பட்ட சிறுமி.. அவளுடன் கூடவே வந்தாள் அவளிளும் சிறிய சிறுமியொருத்தி. தங்கையின் பெயர் சொன்னாள் என்னால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. தொட்டிலில் இருந்த குழந்தையை காட்டி அவனின் பெயர் ”நூர்டீன்” என்றாள். கவலையின்றி, தயக்கமின்றி என்னை தனது நண்பனாய் ஏற்றுக் கொண்டிருந்தாள் போலிருந்தது அவள் நடவடிக்கை.

தனது உடைகளை எடுத்து வந்து காண்பித்தாள், விளையாட்டுப் பொருட்களை காண்பித்தாள். அக்காவின் ”தலையை மூடிக் கட்டும்” துனியை எடுத்துவந்த போது அக்காள் அதை பறிக்க, இவள் இழுக்க, தாய் மறிக்க சிறு யுத்தம் நடந்து முடிய... அழுதபடியே சோபாவில் சாய்ந்து கொண்டாள்.


அருகில் நின்றிருந்த சிறுவன் ஒரு பேப்பரை மடித்து ஏதோ செய்து கொண்டிருந்தான். பேப்பரால் கப்பல் செய்வாயா என்ற போது அழகிய கண்களை அகலமாக விரித்து இல்லை.. நீ செய்வாயா என்றான்.
பேப்பரை மடித்து, மடித்து கப்பல் செய்து காட்டிய பொழுது ஆச்சர்யத்தில் பூத்திருந்தது அவன் கண்கள். கப்பலை வாங்கிப் பார்த்தவன்
நான் எதிர்பார்த்தபடியே அதை பிரித்துப் போட்டான்.. பின்பு மீண்டும் அதை கப்பலாக்கும் முயற்சியில் இறங்கி, முதல் மடிப்பிலேயே பிழையாய் மடித்து மீண்டும் செய் ‌என்றான். மிக ஆறுதலாய் மடிப்புகளை அறிமுகப்படுத்தினேன். இரு தடவை பிழை விட்டவன். மூன்றாம் தடவையில் இருந்து சூட்சுமத்தை கற்றுக்கொண்டான். கற்றதும் தாயிடம் ஓடினான், தந்தையிடம் ஓடினான், அங்கிருந்த மூதாட்டி, அக்காள் என எல்லோரிடமும் காட்டி குதூகலித்தான்.
give me five என்றான் என்னைப்பார்த்து. கையை விரித்து காட்டினேன்.. படார் என்று சத்தம் வர அடித்து...மீண்டும் கப்பல் கட்டத் தொடங்கினான்.

இது வரை கண்ணில்படாத ஒரு சிறுவன் தேனீர் கொண்டு வந்து தந்தான். அவனின் அக்காவும் அங்கிருந்தாள்.

இந்த மனிதனுக்கு எத்தனை குழந்தைகள் என்று எனது சிந்தனையோடியது.. எனது கணக்கில் 5 இருந்தது. இருப்பினும் அவரிடமே கேட்போம் என்று கேட்டேன்...
மனிதர் சர்வ சாதாரணமாக தனக்கு நோர்வேயில்8 பிள்ளைகள் என்றார்... திடுக்கிட்டுப்போனேன் அவனின் பதிலால்..
நோர்வேயில் 8 என்கிறானே அப்படியென்றால் ‌வேறு நாடுகளிலும் குட்டி போட்டிருப்பானோ இவன் எனறு யோசித்தேன். என்றாலும் கேட்கத் தயங்கியது மனது.

நோர்வேயில் பிள்ளைகளை வளர்ப்பது மிகவும் செலவைத்தரும் என்றார் ... அது தானா 8 உடன் நிப்பாட்டிவிட்டீர்கள் என்று கேட்டேன்.... பெரிதாய் சிரித்தார் மனிதர்.

உனக்கு எத்தனை பிள்ளைகள் என்றான். 2 என்றதும் ஏதொ கனக்க எதிர்பார்த்து நான் குறைவாகச்சொன்னது போல் ”ஆக 2 தானா” என்றார்.
புன்னகைத்தேன்.
அவரும் புன்னகைத்தார்.

Printer driver வந்திருந்தது. Install பண்ணி, வேலைமுடித்து வெளிக்கிட்டேன்...

எங்கிருந்தோ ஓடிவந்தான் கப்பல் சிறுவன், give me five என்றான் என்னைப்பார்த்து. கையை விரித்துக் காட்டினேன்.. படார் என்று சத்தம் வர அடித்து bye என்றான் நோர்வேஜிய மொழியில்.


ம‌ழழைக் குரலில் வழியனுப்பினாள் சிறுமி
.

அவளுக்குப் பின்னால் இருந்து குண்‌டி, குண்டி, குண்டி கத்திக் கொண்டிருந்தான் தமிழ் கற்றிருந்த சோமாலிய நாட்டுத் தமிழறிஞன்


அவனின் மொழிப்புலமையை கண்ட தகப்பனும் தாயும் ஆனந்தக்கண்ணீர் வடித்திருப்பார்களோ?


----------------------------------------------------------

இம்சை தரும் கோமாலிய நாட்டவருக்கு மத்தியில் இன்றைய சந்திப்பு வித்தியாசமானது.
இன்றைய நாளும் நல்லதே


4 comments:

  1. எங்கடை ஆட்கள் வெளி நாட்டவர்களுக்கு தமிழில் உள்ள நல்ல சொற்களைச் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். இப்படியான அதி திறமை வாய்ந்த வார்த்தைகளைத் தான் சொல்லிக் கொடுப்பார்கள். எம்மவர்களுக்கு வேற்று நாட்டவர்களின் வாயால் எம் மொழியில் உள்ள தேவையற்ற சொற்களைச் சொல்ல வைத்துக் கேட்பதில் அலாதி இன்பம் இருக்கும் என நினைக்கிறேன்.

    தங்களின் பதிவில் நிறைந்துள்ள சுவாரஸ்யத்தை ரசித்தேன். நல்ல நகைச்சுவையாக விளக்கமாகப் பதிவிட்டுள்ளீர்கள். தொடர்ந்தும் எழுதுங்கோ.

    ReplyDelete
  2. நன்றி நண்பர்களே.

    ReplyDelete

பின்னூட்டங்கள்