தாயிலும் மேலான தாய்



மாற்றான் குழந்தைகளை தன் குழந்தைகள் போல் நடத்துபவர்களை தாயிலும் மேலான தாய் என்று அழைப்பதில் தவறில்லையே. அதிலும் தான் சிங்களவராய் இருந்தாலும் எம்மை வளர்த்து ஆளாக்கிய விதம் அவரின் பெருந்தன்மையைக் கூறும்.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் குடும்பத்துடன் வாழ்ந்தவர். 1962 இல் இருந்து 2001 இல் என் மடியில் உயிர் விடும் வரை தன்னலனை மதியாது எங்கள் குடும்பத்தின் நலனை மட்டுமே விரும்பிய உன்னதமானதோர் தாய்..

1962
ம் ஆண்டுகளில் அப்பாவும், அம்மாவும் கொழும்பில் வாழ்ந்திருந்த காலங்களில் சுகயீனமுற்ற எனது மூத்த சகோதரியை அம்மா வேலைக்குப் போகும் போது கவனித்துக் கொள்வதற்காக அப்பாவின் நண்பரினால் (அப்பாவின் நண்பர் பின்பு எங்கள் சித்தப்பாவாக மாறியது ஒரு பெரிய கதை..அதைப் பற்றிப் பிறகு பார்ப்போம்) அறிமுகப்படுத்தப்பட்டவர். சில மாதங்களின் பின் எனது சகோதரி சிறு வயதிலேயே போய்ச்சேர்ந்த பின்பும் எங்களுடனேயே தங்கிவிட்டவர்.
நான் 1965 புரட்டாதி 30இல் இந்த பூலோகத்தில் இறக்கி விடப்பட்ட போது எனக்கு இந்த பூலோகத்திற்கான guide ஆக அறிமுகப்படுத்தப்பட்டவர். (ஏன்டா இங்க வந்தம் எண்டு நான் இப்ப நினைப்பது வேறு ஒரு கதை)
ம்மா, ப்பா என்னும் ஒலிகள் (வார்த்தைகள்) எழுப்ப நான் பழகிய காலத்திலேயே, அவவை ம்மி (மம்மி அல்ல) என அழைத்தாக கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன் அதுவே பிற்காலத்தில் (ம்மி) என மாறியிருக்க வேண்டும்.

ஞாபகங்களை
ரீவைண்ட் பண்ணிப்பார்க்கும் போது எம்மியைப் பற்றி முதலில் ஞாபகத்தில்
இருப்பது ... கிட்டத்தட்ட 5 - 6 வயதிருக்கும் அப்ப என நினைக்கிறேன். வீட்டில் ஒரு கரும்பலகை இருந்தது. தினமும் காலையில் வேலைக்கு போக முன் எங்கள் வீட்டின் சர்வாதிகாரி (வேற யார் கொப்பர் தான்) கரும்பலகையில் தமிழ் எழுத்துக்களை எழுதி என்னை அவர் எழுதியதன் மேல் பத்துத் தரம் எழுதச்சொல்லுவார். மாலை வேலையால் வந்து 10 தரம் எழுதியிருக்கா எண்டும் பார்ப்பார்.

இப்பிடி
ஒரு நாள் எழுதச் சொல்லிவிட்டு போனார் சர்வாதிகாரி. நானும் ஏதோ ஒன்று, இரண்டு தடவை எழுதிவிட்டு விளையாட்டின் ருசியில் கரும்பலகையை மறந்து விட்டேன்.

வந்தார்
வில்லன்.
பார்த்தார் கரும்பலகையை

கரும்பலகையில்
பத்துத்தடவை எழுதிய அடையாளம் இல்லை.

(ராணுவ) நீதிமன்றம்
கூடுகிறது

நீதிபதி அவர் தான்.. அவர் மட்டும் தான்
அம்மாவும், எம்மியும் பார்வையாளர்கள் என்ற போர்வையில் வந்திருக்கும் எனது கட்சிக் காரர்கள்
நான் கு(சு)ற்றவாளி
விசாரணை ரம்பிக்கிறது

டேய் என்னடா உனக்கு சொல்லியிருக்கிறன்?
எத்தின தரம்டா எழுதி
னீ.?

பத்துத்
தரம்...(உள்ளுக்குள் உதறுகிறது)

(அம்மா உண்மையை சொல்லுடா என்கிறா கண்களால்)
மீண்டும் நீதிபதியின் கடுமையான குரல்

டேய் பொய் சொல்லாத, உரிச்சுப்போடுவன்.. எத்தின தரம்டா எழுதினனீ..?
என் நாக்கு வறண்டு, கண்ணீர் முட்டி வழிய தட்டுத்தடுமாறி மீண்டும் பத்....பத்து என்றேன்

தீர்ப்பு சொல்லாமலே தண்டனையை நிறைவேற்றத் தொடங்கினார்

விஜய் இன் படங்களில் வாற மாதிரி ஓரே நேரத்தில் ஒரு கை வந்து என்னை இழுத்து எடுக்க, மற்ற கை சுவரில் இருந்த பிரம்பை எடுத்து என்ட குண்டியில சிலம்பாட்டம் ஆடிவிட்டது. அம்மா, எம்மி என்ற கத்தலுடன் கையை விடுவித்துக் கொண்டு எம்மியிடம் ஓடுகிறேன். கலைத்துக் கலைத்துக் குத்தும் குளவி மாதிரி மனிசன் பின்னால கலைத்துக் கலைத்து அடிக்குது.

எம்மியும்
.... மாத்தையா (ஐயா) விடுங்க... விடுங்க....... தம்மி பாவம் என்று தனக்குத் தெரிந்த தமிழில் சொன்ன படியே என்னைக் கட்டிபிடித்திருந்தார்.



அப்பா அடித்த அடிகளில் ஒன்றிரண்டு எம்மியிலும் படுவதை கண்ட அப்பா.. அடிப்பதை நிறுத்தி
டேய் போய் எழுதுடா என்றார்.
அன்றிலிருந்து அடியில் இருந்து தப்பிக்க எம்மியிடம் ஓடலானேன். அதையும் தாண்டி அடிவாங்கினால்....எம்மி எண்ணெய் பூசி சுகப்படுத்திவிடுவார்..

இதை விட ஒருதரம் ஏறாவூர் காளி கோயிலுக்கு விளையாடப் போய் கட்டெறும்புகளிடம் அறம்புறமாக கடிபட்டு வீங்கி வந்த போதும் எண்ணெய் தேய்த்து, விசம் இறங்கி உடம்பு வீக்கம் வத்தும் வரை பார்த்துக் கொண்டதும் அவர் தான்.

அந்த காலத்தில் (1969, 1970 சின்ன பென் டோர்ச் (ஒரு விரலளவு இருக்கும்) அது பயங்கர பேமஸ். வீட்டில வாங்கித் தருவதை எப்படியோ கெட்டி்த்தனமாய் துலைத்துவிடுவேன். பிறகு என்ன.. எம்மிக்கு ஐஸ் வைத்தால் புதுசு வரும்.

தம்பி சிறு குழந்தை என்பதால் போட்டிக்கு ஆள் இருக்கவில்லை. கதாநாயகனுக்கு கடைக்கும் மரியாதை மாதிரி மரியாதை கிடைத்தது. (அப்பா மட்டுமே வில்லனாய் இருந்தார்) எம்மியின் புண்ணியத்தில் சிங்களம் தளதண்ணியாய் வாயில் வந்தது. தம்பி என்னும் பெயர் மாறி பெரிய தம்பியாகியிருந்தேன் தம்பி பிறந்து 2, 3 ஆண்டுகளில். எது வேண்டுமானாலும் கிடைத்தது. ஆனால் திரத்தித் திரத்தி பெரிய தம்பி சாப்பிடுங்க, சாப்பிடுங்க என்பது மட்டும் இம்சையாய் இருந்தது.

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அரசாங்க வேலை. அடிக்கடி மாற்றலாகி இடம் மாற நேரிடும். பிபிலைக்கு இடம் மாறிய போது அங்கு தமிழ் பாடசாலை இல்லாததால் வந்தது பிரச்சனை. இந்த அறிவாளியை எங்கு படிக்க வைப்பது என்று ‌பலமாய் யோசித்து இறுதியில் கொழும்பிலுள்ள தாய்மாமன் வீட்டில் இருந்து படிப்பது என்று முடிவாகியது. நான் கொழும்பு போவதை எம்மி விரும்பவில்லை. நானும் தான். 8 வயதில் வீட்டாரைப் பிரிந்து இருப்பது பற்றி நான் அறிந்திருக்காவிட்டாலும் பயத்தில் அழுது அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தேன். எம்மியும் எனக்கு சாதகமாகவே கதைத்துக் கொண்டிருந்தார்
நம்மட கதையை யாரு கேட்டா (இந்த காலத்திலயே கேக்கிறாங்க இல்ல)..சர்வாதிகாரியின் முடிவுகளில் மாற்றமிருக்குமா என்ன? கொழும்பு போவதற்கு முன் எம்மியின் பாயில் அழுதழுது படுத்திருந்தேன். எம்மியும் அழுது கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை பஸ் ஸ்டான்ட்இல் சர்வாதிகாரி தன் கண்களாலேயே என்னை அடக்கிக்கொண்டிருந்தார். அவரின் கண்களும் கலங்கியிருந்திருக்கும்.. மனிசன் வெளியில் காட்டியிருக்க மாட்டார். எம்மியின் முத்தங்களுடன் கொழும்பு போயிறங்கிய போது தான் வாழ்க்கை முதன் முதலில் வலித்தது.

மாமா குடும்பத்தினர் அன்பானவர்கள் தான். இருந்தாலும் சொந்த வீடு போல வருமா? வருடத்திற்கு மூன்று முறை வீடு வருவேன். ஆகா.. என்ன ம‌ரியாதை கிடைக்கும் தெரியுமா?

எம்மியின் அன்பில் உருகிய காலம் அது. என்னைக் கண்டதும் எம்மி  சொல்லும் முதல் வார்த்தை ”புத்தா கெட்டுவெலா நே” என்பதாகும்.. அதாவது மகன் மெலிந்து விட்டாரென்பதாகும். மாமா என்ன என்னை கொலைப்பட்டினியா போட்டார், கொழும்பில்... நான் மெலிய? ஆனால் எம்மி எப்போது கொழும்பில் இருந்து வந்தாலும் இதையே மறக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

எள்ளுருண்டையில் இருந்து பல் வகை வாழைப்பழங்கள், பல்வ‌கை உணவுகள் என நான் வீட்டிலிருக்கும் ஒரு மாதமும்  நமக்கு திருவிழா தான். மெலிந்தவனை தெம்பாக்குகிறேன் என்று அவ செய்த இம்சை கொஞ்சமா நஞ்சமா?

ஒரு முறை காய்ச்சல் வந்து கன நாள் படுத்திருந்தேன். அந்த நாட்களில் ஒரு நாள் வீடே அல்லோகலப்பட்டது. எம்மி அறம்புறமாய் கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருக்க யார் யாரோ வந்து பந்தல் போட்டார்கள். உள்ளூர் மந்திரவாதிகள் வந்து மந்திரித்தார்கள், புத்தபிக்குகள் விடிய விடிய பிரித் ஓதினார்கள். அடுத்த நாள் மந்திரித்த தண்ணீரில் குளிப்பாட்டினார்கள்.. காய்ச்சல் தன் பாட்டில் போனது ஆனால் எம்மியோ எல்லாம் மந்திரத்தின மகிமை தான் என சொன்னார். எனக்கு கண்ணூறு பட்டிருந்ததாம் அது தான் காய்ச்சல் வந்ததாம்.

எங்கும் வெளியில் போய்வந்தால் சிரட்டைகளை கொளுத்தித் தணலாக்கி ஒரு கையில் உப்பு, காய்ந்தமிளகாய் இன்னும் ஏதோ எல்லாம் எடுத்து சாமிக்குத் தீபம் காட்டுவது போல எனக்கும் தம்பி தங்கைக்கும் காட்டி சிரட்டைத் தணலில் கொட்டுவார். அது பெரிதாய் வெடித்துச் சத்தம் போட்டால் என்னில் யாரோ பெரிய கண்வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். (அப்ப நீங்க வைத்த கண்ண யார் சுத்திப் போடுறது என்று யாரும் கேட்டால் நமக்கு கெட்ட கோவம் வரும்)

வீட்டில் எம்மியின் ஆட்சி தான் நடக்கும். எனது தேவைகள் மேலிடத்தில் மறுக்கப்பட்டால் கண்ணைக் கசக்கிக்‌ கொண்டு எம்மியிடம் போவேன். மறுபரீசீலனை செய்து எனது தேவையை மேலிடம் தீர்க்கும். அவ்வளவு பவர் இருந்தது எம்மிக்கு எங்கள் வீட்டில்.

1981 இல் அப்பாவின் மறைவுக்குப் பின் நான் சர்வாதிகாரியாகப் பதவியுயர்த்தப்பட்டேன். சகலமும் ”லொக்கு புத்தா” (பெரிய மகன்) வாக மாறியிருந்தது. கண்டிப்பு கலந்த ஒரு அதிகாரத்துடன் என்னை கவனித்துக் கொண்டார். எனது நண்பர்கள் கூட்டமும் அவரிடம் சற்று அவதானமாகவே நடந்து கொண்டது.

1983 ம் ஆண்டு, ஜூலை கலவரம் நடக்கிறது.. வெலிக்கடைச் சிறையில் தமிழர்களைக் கொலை செய்த செய்தி வெளிப்பட்டு ஊரெல்லாம் கலவரப்பட்டுக் கொண்டிருக்க.. எனது கோவமும், ஆற்றாமையும் அவரின் மேல் பாய்ந்தது. அவரின் படுக்கையை கலைத்தெறிந்தேன். தாறுமாறாய்ப் பேசினேன்.

அமைதியாய் என்னைப்  பார்த்தவர் சொன்னார் அரைகுறைத் தமிழில் .. தம்பீ.. அது நானில்லை என்று.
அடுத்த நாள் காலை படிக்க எழுப்பிவிட்டு கோப்பி போட்டுத் தந்ததும் அவர் தான்.

அடுத்து வந்த ஆண்டுகளில் தம்பியை ஆமி பிடித்துக்கொண்டு போன போது... ஏறாவூர் புத்த பிக்குவை துணைக்கழைத்து ஆமிகொமான்டரையும் ஒரு கை பார்த்து, தம்பியை வெளியே எடுக்க  முன்னின்றவர்களில் அவரும் ஒருவர்.

வீட்டுக்கு பின்னால் தோட்டம் செய்வார், கோழிகளும் வளர்ப்பார். எப்போதும் ஏதோ செய்தபடியே இருப்பார். அவரின் ஈரப்பிலாக்காய், அன்னாசி, மாம்பழக் கறிகளின் சுவை இன்றும் என் நாவில் இருக்கிறது.
1985ல் இந்தியா சென்று அதன் பிறகு வெளிநாடே வாழ்க்கையென்றாகிய போது  எடுத்த முதல் சம்பளத்தில் ஒரு பகுதியை அவருக்கும் அனுப்பியிருந்தேன். அடுத்தடுத்த கிழமைமைகளில் சிங்களத்தில் வந்திருந்தது ஒரு கடிதம்.. தட்டுத்தடுமாறி வாசித்தேன்.

பெரிய மகனே! தயை செய்து எனக்குப் பணம் அனுப்பாதே. நீ சுகமாயும், சந்தோசமாயும் இரு. நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். என்றிருந்தது அதில்.

இறுதிவரை பணம் என்பதை எதிர்பார்க்காதவர். தனக்கென்று எதையும் சேர்த்துவைக்காத புனிதமான ஜீவன். தனது தங்கை இறந்ததும் அவரின் ஒரே மகனை வளர்த்து ஆளாக்கியதும் அவர் தான்.
எனது குழந்தைகளை வாஞ்சையுடன் கவனித்துக் கொண்டார். வயதான காலத்திலும் கூட. அவர்களும் தயக்கமின்றி ஒட்டிக்கொண்டார்கள் அவருடன். பெருமையாய் இருந்தது எனக்கு.

2001ம் ஆண்டு ஒரு நாள் வீடே கல்யாணக்களையில் மயங்கியிருந்தது (அடுத்த நாள் தங்கையின் கல்யாணம்)

அவரும் அங்கிருந்தார்

மாலை நேரமிருக்கும். அவர் குசினிக்கு போவதைக் கண்டேன். பெரிதாய் ஏதோ விழுந்த சத்தம் கேட்டு ஓடினேன், குசினிக்குள் தலையில் இரத்தக்காயத்துடன், நினைவு தப்பிக்கொண்டிருந்தவரைத் தம்பியுடன் சேர்ந்து தூக்க, அம்மா வந்து நாடி பிடித்துப் பார்த்து, அழைத்த அம்பியூலன்ஸ் அரைமணிநேரம் தாமதமாய் வந்த போது குழந்தையாய் செயலற்றுக்கிடந்தார் என் மடியில்.
வண்டியில் ஏற்றி தம்பி முன்னிருக்க

என் மடியில் தலைவைத்து எம்மி படுத்திருக்க அம்மா அவருக்கருகில் அமர்ந்திருந்தார்

5 கிலோமீற்றரை 50 நிமிடமாய் கடந்து கொண்டிருந்தது வண்டி. நாடி பிடித்துப் பார்க்கும் அம்மாவின் முகம் கண்டு, மெதுவாய் நானும் நாடி பிடித்துப் பார்த்தேன். தூரமாய் கேட்டது நாடித் துடிப்பு. ஆஸ்பத்திரியை அடைந்தபோது தூரமாயிருந்த நாடித்துடிப்பும் தொலைந்திருந்தது.
வைத்தியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், மரணத்தை. அவருக்கு முன்பே அம்மா "எம்மி இல்லையடா" என்றிருந்தார் கலங்கிய கண்களுடன்.
தனியே விடப்பட்டோம் அம்மாவும் நானும், எம்மியுடன். அமைதியாய் இருந்தது அவர் முகம். அவரின் கால் பற்றி அமைதியாய் நின்றிருந்தார் அம்மா. இறுதியாய் கால் தொட்டுக் கும்பிட்டு வெளியில் போனார். நானும் அமைதியாய் வெளியில் வந்தேன்.
நாளை கல்யாணம் என்னும் நிஜம் முகத்தில் அடித்தது. தம்பியிடம்  ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாகப் பொய் சொல்லி அனுப்பினேன். தங்கையிடமும், மற்றவர்களிடமும் அப்படியே சொன்னேன். எம்மியின் வீட்டுக்குச் செய்தி போனது. வந்தார்கள் அவர்களும். எம்மி திருமணம் நிறுத்தப்படுவதை விரும்பமாட்டார் என்பதும் பலரின் வாதமாய் இருந்தது (எம்மியின் வீட்டார் உட்பட). எனக்குச் சம்மதமாயிருக்கவில்லை அது
எனினும் பல நியாயங்கள் நியாயமாய் பட்டன.

ஒரு பக்கம் மணவீடு

மறு பக்கம் மரணவீடு
உண்மை தெரிந்தவர்களோ மிகச் சிலர்
எதிரிக்கும் வரக்கூடாத சோகமது

அடுத்தநாள் அம்மா அமைதியாய் நின்றிருந்தார். ஒரே நேரத்தில் மணவீட்டையும், மரணவீட்டையும்

ஒருங்கிணைக்கும் பாரம் என்னில் விழுந்திருந்தது
நல்ல வேளை, தங்கையின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் தேவை எனக்கு வரவில்லை. திருமணம் இனிதே முடிந்தது. இதற்கிடையில், (திருமணத்திலன்று) திருமண மண்டபத்திற்கு முன்னால் நடந்த வாகனவிபத்தொன்றில் காயப்பட்டவரை, நேற்று எம்மியைக் கொண்டு சென்ற அதே ஆஸ்பத்திரிக்குத் தம்பி எடுத்துச் சென்றிருக்கிறான். அங்கு எம்மியைத் தம்பி தேடி.. உண்மையறிந்து அவரைத் தேடி அவரின் வீடு போயிருக்க மரண வீட்டிற்கான எல்லா ஒழுங்கும் செய்து மனம் ரணமாய் இருக்க, களைத்து வீடு திரும்பிய போது நான் நன்றாக நடிப்பதாகச் சொல்லி நக்கலடித்தவரின் கன்னம் கணப் பொழுதில் பழுத்துக்கிடந்தது, என்னால். (வார்த்தையால் கொல்லும் மனிதர்களும் உண்டு இவ்வுலகத்தில்)

மறு நாள் அவரின் வீடு போய் இரு நாள் தங்கி இறுதிக்கிரியைகளின் போது "யாரும் ஏதும் பேச விரும்புகிறீர்களா?"என்ற போது ”எல்லோருக்கும் ஒரு தாய், ஆனால் எமக்கு மட்டும் இருவர்”
என்று சொல்லி முடிக்க முதல் உடைந்தழுதேன். தம்பியும், தங்கையும் சேர்ந்தழுதார்கள்.

எல்லாம் முடித்து நிதானித்துச் சிந்தித்த போது என்னைத் தேற்றுவதற்காகவே என் மடியில் உயிர் விட்டாரோ? எனக் கேட்கிறது என் மனம். இறந்தும் இறக்காதிருக்கிறதோ அவரின் ஈகும் குணம்?

எங்கள் எம்மிக்கு இது சமர்ப்பணம்.


.

1 comment:

  1. இன்றுதான் உங்கள்தளம் ...் வருகிறேன். "தாய்மை எந்த மொழி பேசினாலும் உள்ளத்தில் தான் உண்டு."
    தாய்மைக்கு நிகர் ஏதும் இல்லை. குழந்தைப் பருவத்தில் இருந்து இன்றுவரை மறக்காமல் அழகுதமிழில்
    வடித்து இருக்கிறீர்கள். பாராடுக்கள். நட்புடன் நிலாமதி அக்கா

    ReplyDelete

பின்னூட்டங்கள்