மச்சாங்... கடல குலிக்க போறது

ஒவ்வொரு சனி மாலையும் ஏறாவூர் யுனைடட் மைதானத்தில் நாம் விளையாடி ஓய்ந்து கலையும் போது ”மச்சாங் நாலிக்கு.. கடல குலிக்க போறது” என்று சொல்லிக் கலைந்து போவான் மார்க்கட்டில் வியாபாரம் செய்யும் மோகன என்னும் சிங்கள நண்பன்.

அவனுக்கு கடலில் குளிப்பதொன்றால் பெரிதாய் பிடிக்காது ஆனாலும் கடற்கரைக்கு அவன் போயே ஆகவேண்டும். அங்கு  களவெடுத்துத் தின்னும் இளநீரும், தேங்காய்ச்சொட்டின் மீது அப்படியொரு கெலியிருந்தது அவனுக்கு.

ஞாயிறு மதியம் 10 மணிக்கு வீடுவீடாய் போய் விளையாடும் அனைவரையும் ”மச்சாங் வா கடல குலிப்பம்” என்பான். ல, ளி யை கொலைசெய்வது பற்றி கவலைப்படாத தமிழறிஞன் அவன்.  எப்படியோ 4, 5 சைக்கில்களில்  15 பேராவது வெளிக்கிடுவோம்.

முக்கியமாய் தென்னைமரம் ஏறத் தெரிந்த தயா வலு மரியாதையுடன் அழைத்துவரப்படுவான். அவனில்லாமல் கடல்குளிப்பில்லை எமக்கு, அந்தக்காலத்தில். குரங்காய் பிறந்திருக்க வேண்டியவன் ஏனோ ஜெயப்பிரகாசத்தாரின் மூத்த மகனாய் பிறந்திருந்தான். எந்த மரமும் அவனுக்கு ஒரு பிரச்சனையுமில்லை. மரத்துக்கு தான் அவனால் பிரச்சனை.

ஒரு சைக்கிலில் 3 பேர் பயணிப்போம். சில வேளைகளில் இடமில்லை என்றால் நான்குபேரும் ஒரு சைக்கிலில் பயணித்த காலங்களுமுண்டு. சைக்கில் ஹான்டில்இல் ஒருவன், பாரில் ஒருவன், சீட்டில் ஒருவன், பின் சில்லின் இரு கரையிலும் கால்வைத்து சீட்டில் இருப்பவனின் தோள் பற்றியபடி ஒருத்தன் என நட்பின் நெருக்கம் சுவைத்தபடியே புன்னக்குடா செல்லும் 3 மைல் தூரமும் ஒரு நட்புத்தொடரூந்து போய்கொண்டிருக்கும்.

நீண்ட போகும் தார் இல்லாத தார்ப்பாதையில் ஒரு இடத்தில் திரும்பிதும் தூரத்தே நீலமாய் கடலும், வெள்ளை மணலும், சில குடிசைகளும் தெரியும். கடற்கரைக்கருகில் காட்டுக்குள் சைக்கில்களை ஒளித்துவைத்துவிட்டு மண்தெறிக்க கடலை நோக்கி ஓடும் போது மோகன மட்டும் தயாவை கெஞ்சிக் கொண்டிருப்பான் மச்சாங் இலனி வெனும், இலனி வேனும் என்று.  தயா அதை கண்டு கொள்ளவே மாட்டான்.

தயாவின் அலட்சியம் கண்டு சினம் கொண்ட மோகன ஒரு தரம் மரம் ஏறி உள்ளம் தொடையில் தோலுரிந்து நின்றிருந்தான். இன்னொரு முறை நன்கு வளைந்திருந்த மரத்தில் ஏறி இறங்கத் தெரியாமல் முழுசிய போது நாம் கஸ்டப்பட்டு இறக்கியெடுத்தோம்.

கடலுக்குள் குதித்ததும் வாயெல்லாம் உப்புக்கரித்து, கண்ணெரிந்து சகஜமாக சற்று நேரமெடுக்கும். அதன் பின் ஆடி அலுக்கும் வரை கும்மாளம் தான்.

இவனை அவன் தண்ணீக்குள் தாழ்ப்பதும்,
அவன் இவனை தாழ்ப்பதும்,
மணிக்கட்டை மேல்நோக்கி மடக்கி தண்ணீரை மற்றவர்களை நோக்கி கையால் இறைப்பதும்,
அதுவே கோஸ்டி போட்டியாக மாறுவதும்,
மோட்டார் படகில் ஏறிக் குதிப்பதும்
நட்பின் தோளில் ஏறி நீருக்கும் பாய்வதும்
சுளியோடுவதும்
அவனிவனின் காற்சட்டைகளை களட்டுவதும் என்று நேரம் போவதே தெரியாது.

மெதுவாய் வயிறு புகைக்கத் தொடங்கும் போது வெளியே வந்து ஒரு பிளேன் டீ வாங்கி அதை மூன்றாய் பிரித்து குடிக்க முதல் உப்பு படிந்த தலைமயிர் மட மடவென்று காய்ந்து போயிருக்கும். ‌

மெதுவாய் தென்னம் காட்டுக்குள் புகுந்து தயாவை மரத்தில் ஏற்றினால் மோகன கேட்ட இலனீயும், தேங்காயும் பசிசை ஆற்றும். வரும் வழியில் இருக்கும் கஜூ தோட்த்தினுள்ளும் போய்வரத் தயங்குவதில்லை நாம். கஜூப்பழத்தின் சுவையே தனி.


சைக்கிலில்
இருவர் பெடல் போட்டு
வீடுவந்து..
சிறிதாய் ஒரு  பேச்சு வாங்கி
வயிறு நிரப்பி
பந்தைக் கையில் எடுத்து
சைக்கிலை எடுத்து மிதித்தால்
மைதானத்தில் காத்திருக்கும்
காலையில் குளிக்கச் சென்ற
அதே விடலைக்கூட்டம்
பிறகென்ன
இருட்டில் பந்து தெரியாமல் போகும் வரை
உலகமே மறந்துபோகும்

கலைந்து போகும் போதும்
தான் தின்ற இலனி பற்றி புழுகிக்கொண்டு போவான் மோகன.


மீண்டும் ..... வாழும் நாள் வாருமா?


புலம் பெயர்ந்து பல ஆண்டுகளின் பின்னான  இன்று மாலை என்ன செய்வது என்று புரியாமல் அலுப்படித்திருந்தபோது நினைவலைகளினூடாக வந்து மையிலிறகால் நெஞ்சு நீவிப்போன அனைத்து பால்ய சினேகங்களுக்கும், விடுதலைக்காற்றில் கலந்துவிட்ட ”அருள்”க்கும், ஏறாவூர் யுனைடட் விளையாட்டுக்கழகத்திற்கும் இது அர்ப்பணம்.



.

3 comments:

  1. பகிர்வுக்கு நன்றீ.மனம் பதறுகிறது...எழுத்தில் வேகம் தெரிகிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நான் எப்போதும் உங்கள் கதைகளை ரசித்து படிப்பேன். அதிலும் இலங்கை சம்பவங்களை வைத்து எழுதும் கதைகளை மிகவும் ரசிக்ககூடியதாக இருக்கும் ஏன் எனில் அது நமது காலம் அங்கு மீட்கபடுகிறது, நன்றி உங்கள் பணிக்கு

    ReplyDelete
  3. யூனைடேத் கிளப் டீம் தலைவர் நீங்கள் தனது நாமத்தை சொல்லவில்லை என குறைபட்டார். நான் சமிபத்தில் அவருடன் பேசி உங்கள் கதைகள் பல பிளாக்கர் உள்ளது என கூறியபோது. உண்மையேல் எனக்குதெரியாது.

    ReplyDelete

பின்னூட்டங்கள்