குழந்தையின் உலகத்தில் ஒரு விசரன்

சில தினங்களுக்கு முன் தங்கள் கணணி இயங்கவில்லை உதவி  செய்ய முடியுமா என கேட்டார் ஒருவர். ஒப்பந்தம் செய்தடி போய் இறங்கினேன். வீட்டின் சுற்றுப்புறம் நம்பிக்கையற்றதொரு சூழ்நிலையை தெரிவித்துக்கொண்டிருக்க மனது எச்சரிக்கை மணியை பெரிதாயே அடித்தது.

13ம் நம்பர் வீடு எனக் குறிப்பிட்டிருந்தார் தொலைபேசியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர். வீட்டு மணியை அழுத்தினேன். ஒருவரும் வெளியே வரவில்லை பல நிமிடங்கள். திடீர் என உடம்பு முழுவதையும் கம்பளியால் போர்த்தபடி, முகத்தில் நித்திரைக்களையும் ஒரு வயதான சீக்கியர் ஒருவர் வெளியே வந்தார்.

நீங்களா என்ளை அழைத்தீர்கள் என்று கேட்டேன். நான் கேட்டது அவருக்கு புரியவில்லை எனப் புரிந்தது. அதை வேளை அவர் அவரின் பாசையில் அவர் சொன்னது எனக்கும் பரியவில்லை. மன்னித்துகொள்ளுங்கள் என்று சொல்லி வாகனத்தை நோக்கி திரும்பிய போது எனக்குப் பின்னால் கதவு அறைந்து சாத்தப்படும் சத்தம் தேவைக்கு அதிகமாகவே கேட்டது.

வாகனத்தில் அமர்ந்து தொலைபேசியை இயக்கி தொடர்பு கொண்டேன். தொடர்பு கிடைத்த போது நான் நீங்கள் தந்த விலாசத்தில் நிற்கிறேன் என்றேன். பொறுங்கள் வருகிறேன் என்றார். வாகனத்தால் இறங்கி காத்திருந்தேன்.

நிலத்தின் கீழ் இருந்து மேல் நோக்கி இருந்த ஒரு படியில் மேலேறி வந்‌து என்னை அவரது நிலக்கீழ் வீட்டிற்கு அழைத்துப் போனார். வாசலில் அழகே உருவான ஒரு பெண்குழந்தை தந்தையை அணைத்தபடி என்னை எட்டிப் பார்த்தாள். அவளது சொக்கையில் மெதுவாய் தட்டினேன். மிக அழகாய் வெட்கப்பட்டு நட்பாய் புன்னகைத்தாள்.

வாழ்க்கை, உலகில் குழந்தைகளின் புன்னகைகளுக்கு ஈடான அழகு வேறெதுவுமில்லை இல்லை என்பது மீண்டும் நிரூபித்துக் கொண்டிருந்தது.

அவர்களின் கணணிக்கு முன்னால் ஒரு சிறுவன் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு நான்கு வயதிருக்கும். கணணி இயங்கவில்லை. இருப்பினும் அதை அமத்தியபடியும்,  மௌஸினால் ஆட்டியபடியும் இருந்தான். அவன் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

தந்தை கணணியை அவனிடமிருந்து எடுத்துத் தந்தார். மனமின்றி அதை அவரிடம் கொடுத்தான்.

மெதுவாய் கணணியை இயக்கினேன். இயங்க மறுத்தது. அந்த சிறுவன் எனக்குப்பக்கத்திலேயே நின்று கொண்டான். தந்தை வெளியே சென்றார். தாய் குசினுக்குள் நின்றார். சிறுவனைப் பார்த்து உனது பெயர்  என்ன என்றேன். மெளனமாய் கணணியைப் பார்த்தபடியே நின்றிருந்தான். மெதுவாய் அவனின் வயிற்றில் கீச்சம் காட்டினேன். அவன் கண்கள் அதை விரும்பவில்லை என்பதை காட்டின.

சில நிமிடங்களின் பின் கணணியை இயக்கும் நிலைக்கு கணணியை கொண்டுவந்த போது எனக்குப் பின்னால் நின்றிருந்த சிறுவன் என்னருகில் நெருங்கி நின்றிருந்தான். அவன் கண்கள் ஒளி கொண்டிருந்தன. மீண்டும் கீச்சம் காட்டினேன். சிரித்தான், சினுங்கினான். அவனின் நீல நிறக் கண்கள் ஒளி வீசிக் கொண்டிருந்தன.

அம்மாவை அழைத்து ஏதோ சொன்னான் எனக்குப் புரியாத ஒரு மொழியில். அவன் குரலில் ஒரு வித துள்ளல் இருந்தது. கணணி இயங்கத் தொடங்கியதும் ஆளே மாறிப்போயிருந்தான்.

கணணி தன்பாட்டில் தன்னைத் தானே திருத்திக் கொண்டிருந்தது. தாய் மிகவும் சிறப்பாக ஆங்கிலம் கதைத்தார். ஆனால் நோர்வேஜிய மொழி அவருக்கு சிக்கலாக இருந்தது.

அவர்கள் ரூமானியா நாட்டவர்கள் என்றும். நோர்வேயில் தங்கியிருந்து வேலை செய்வதாயும் சொன்னார்கள். தற்போது இருவரும் வேலை இன்றி இருப்பதாயும், இங்கிலாந்தில் இருந்து கணவரின் சகோதரி அனுப்பும் பணத்தில் வாழ்வதாயும், நோர்வே அரசின் கொடுப்பனவுகள் ஏதும் இது வரை கிடைக்கவில்லை எனவும் சொன்னார். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் நிலக்கீழ் பகுதியினை இந்த இளவேனில் காலத்தின் போது தனது கணவர் புணரமைத்துக் கொடுத்ததாகவும், கணவருக்கு கட்ட வேலைகள் தெரியும் என்றும், தான் 5 நட்சத்திர ‌ஹோட்டலில் வேலை செய்திருந்தாலும் தனக்கு நோர்ஜிய மொழி தெரியாததனால் இங்கு வேலை கிடைப்பதில்லை என்றும் சொன்னார். எங்காவது வேலை இருப்பதாக தெரிந்தால் அறிவிக்கும் படியும் கேட்டுக் கொண்டார். எனது மனம் ஏதோ கனத்துப் போனது. தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன் என்றேன்.

கணணியை திருத்தி இணையத்துடன் இணைத்தேன். தாயிடம் இணையத்துடன் கணணியை இணைத்துள்ளது பற்றிச் சொல்ல அதை தாய் அந்தப் பையனிடம் சொல்ல அவனின் குதூலத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே. துள்ளினான், சோபாவில் ஏறிக் குதித்தான், தாயைக் கட்டிக் கொண்டு கத்தினான்.

அவனின் அந்த குதூகலம் எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. தாயே அப்புதிரை அவிழ்த்தார். நோர்வேஜிய மொழி தெரியாததனால் அவனுக்கு நண்பர்கள் இல்லை என்றும் அதனால் அவனின் பொழுது போக்கு இணையத்தில் கணணி விளையாடுவது என்றும் சொன்ன போது புரிந்தது எனக்கு அவனின் குதூகலத்தின் காரணம்.

அருகில் அழைத்து பெயர் என்ன என்றேன். தாய் மொழி பெயர்த்தார். தான் பெயர் ப்ளோரின் ஜூனியர் என்றான். அழகான பெயர் என்றேன். தாய் மீண்டும் மொழிபெயர்த்தார். நன்றி என்றான் ஆங்கிலத்தில்.

கணணியை தூக்கி அவனிடம் கொடுத்‌தேன். பளிங்கு போன்ற நீலக்கண்ணால் நன்றி சொல்லியபடி கணணியை மிகவும் லாவகமாய் இயக்கி, தான் விளையாடும் இணையத்தினுள் புகுந்தான். பின்பு இவ்வுலகை மறந்தும் போனான்.

நான் வெளிக்கிட்டதும் பெண்குழந்தை முத்தம் தந்து கையசைத்தது, ப்ளோரினோ கணணிணயை பார்த்தபடி இடது கையால கையைக் காட்டினான். அவனது வலது கை மௌஸ்ஐ அசைத்து ஒரு காரை  வேகமாக இயக்கிக் கொண்டிருந்தது.

எனக்கும் அந்தக் குழந்தை போல் உலகத்தை மறந்திருக்க அசைதான். ஆனால் வாழ்வு தான் விடமாட்டேன் என்கிறது. ஆனாலும் எனக்குள் இன்னும் ஒரு குழந்தை இருந்து கொண்டிருப்பதே ஆறுதலாயிருக்குிறது எனக்கு.

இன்றைய நாளும் நல்லதே


.

3 comments:

  1. குழந்தைகளின் மகிழ்ச்சி விலைஇல்லாதது .குழந்தைகளோடு குழந்தையாகும் மனசு.
    பாராடுக்கள்.

    ReplyDelete
  2. "வாழ்க்கை, உலகில் குழந்தைகளின் புன்னகைகளுக்கு ஈடான அழகு வேறெதுவுமில்லை இல்லை ..."
    மனதிற்கு சுகம் அளிக்கும் பதிவு

    ReplyDelete
  3. நன்றி நன்பர்களே.

    ReplyDelete

பின்னூட்டங்கள்