வானத்திலிருந்து விழுந்த நான்

 2009 ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு பயணமாவதற்கு முன்பே, இந்தப் பேரழகனின் மனதுக்குள் விமானத்தில் இருந்து பரசூட் மூலம் குதிக்கும் ஆசை வந்திருந்தது. ஏற்கனவே நோர்வேயில் முயற்சித்தது தான். இருப்பினும் அது விமானத்தில் இருந்து குதித்ததல்ல, அது. ஒரு மலையுச்சியில் இருந்து குதித்தேன். நான் தரையிரங்கும் இடத்தில் எனது இரண்டு இளவரசிகளும் நின்றிருந்தார்கள். இறங்கியதும் சிட்டாய் வந்து கட்டிக்கொண்டார்கள், பெரும் பெருமையுடன்.

சிட்னியில் விமானம் மூலம் பாயலாம் என்று அறிந்திருந்தேன். எனினும் ஒன்றரை மாதமாய் அங்க தங்கியிருந்து, புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் இதைப்பற்றி சிந்திக்க நேரம் கிடைத்தது. இணையத்தில் தேடி ஒரு இடத்தைக் கண்டுபிடித்து, அடுத்த நாள் பாய்வதற்கான ஒழுங்குகளையும், அதற்கான பதிவுகளையும் செய்து கொண்டேன்.

தனது மூத்த அண்ணண் இன்று ”மண்டையப்போட்டாலும்” என்று நினைத்தாளோ என்னவோ  எனது தங்கை, தானும் வருகிறேன் என்று கூறி, மச்சானின் வாகனத்தை அபகரித்து, அந்த ரதத்தில் என்னையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டாள்.

ஏறத்தாள 1,5 மணிநேரம் பயணம் என கூகிளாண்டவர் கூறியிருந்தமையினால், நிம்மதியான தூக்கமடிப்போம் என்று நினைத்திருந்தேன், நான். ஆனால் தங்கையோ, இன்றுதான் அண்ணணுடன் கடைசியாகக் கதைக்கிறேன் என்று நினைத்திருக்கவேண்டும், வழி முழுவதும் முச்சுவிடாது கடித்துக்கொண்டே வந்தாள்.

நாம் பரசூட்இல் இருந்து பாயும் இடத்தை நெருங்கிய பேது வானில் பல நிறங்களில் பரசூட்கள் தெரிந்தன. அவை ஆடி ஆடி  மெதுவாய் இறங்கிக்கொண்டிருந்தன. எவரும் முட்டை விழுந்து உடைவது போன்று விழுந்து உடல்சிதறி என்னைப் பயமுறுத்தவில்லை.

தங்கை காரை நிறுத்தியதும் அலுவலகத்துக்குள் புகுந்து எனது ஆசையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினேன்.

 நான் இறந்தால் அதற்கு அவர்கள் பொறுப்பல்ல என்ற தொனியில் பல பக்கங்கள் கொண்ட ஒப்பந்தம் ஒன்றிலும், எனக்கு சில பல நோய்கள் இல்லை என்ற தொனியிலும் இருந்த ஒப்பந்தங்களை வாசிக்காமலே கையெழுத்திட்டேன். தங்கை சிட்னி முருகனுக்கு நோ்த்தி வைத்திருந்திருப்பாள் என்றே நினைக்கிறேன்..

அந்த அலுவலகத்துஅழகி, சுளையாக 250 அவுஸ்திரேலிய டாலர்களை வாங்கிக் கொண்டாள். புகைப்படமும், வீடியோவும் எடுத்துத் தருவதற்காக இன்னும் கொஞ்சம் டாலர்களை உருவிக்கொண்ட பின், இன்னும் சற்று நேரத்தில் எனது வாழ்க்கையையே முடிவுசெய்யப்போகும் பயிற்சியாளரை அறிமுகப்படுத்தினாள். அருகில் தங்கை மெளன அஞ்சலிக்கு நிற்பது போல  அமைதியாக நின்றிருந்தாள். உள்ளுக்குள் அப்பாடா இன்றுடன் நிம்மதி என்று நினைத்திருக்கலாம் ... யார் கண்டது.

பயிட்சியாளரும் வாங்கிய பணத்துக்காகக் கதைத்தார். பலர் வீடுகளில் சர்வதிகாரியின் கட்டளைகளுக்கு பூம் பூம் மாடு போல் தலையாட்டுவது போன்று நானும் அவர் கூறிய எல்லாவற்றிற்கும் தலையாட்டினேன். ஆனால் அவரின் கதையும் பலரின் வீடுகளைப்போன்று இங்கும் ஒரு காதால் உள்ளே போய் மற்றய காதால் காலதாமதமின்றி உடனேயே வெளியேறியது.

எனது கண்கள் அங்கு வந்து ஆட்களை ஏற்றிச் செல்லும் விமானத்தில் இருந்த போது, தங்கை கையில் ஒரு தொல்லைபேசியுடன் ஓடி வந்தாள். யாரருக்காவது எமன் கையிற்றை எறிந்துவிட்டானோ என்று பயந்தபடியே தொல்லைபேசியை வாங்கி காதருகில்வைத்தபோது மறுபக்கத்தில் எனது தங்கையின் அடிமையான எனதருமை மச்சான், மச்சான்! கவனம், கவனம், கவனம் என்று எனது கவனத்தை திருப்பப் பார்த்தார். நான் அவரின் பேச்சில் கவனமில்லாமல் இருப்பதை அறிந்ததும் மீண்டும் கவனம், கவனம் என்று கூறி மறைந்தார்.

எனக்கு வானத்தில் இருந்து பாய்வதற்கான உடைகள் தரப்பட்டது. எனது அழகிய உடலுடன் ஒட்டியபடி செக்சியாக இருந்தது உடை. ஒருவித பட்டிபோன்றதொன்றைத் தந்தபோது, ஏன் இது? என்றேன்.

இது தான் உன்னை என்னுடன் இணைத்துவைத்திருக்கப்போகும் பட்டி என்றார்.

உடனே அத
ை கவனமாகப் மூன்று முறை கண்ணில் ஒற்றி எடுத்து .. சிட்னி முருகா .. என்றபடியே பூட்டிக் கொண்டேன்.

பயிட்சியாளர் எனக்குப் பின்புறம் வந்து நின்று அந்த பட்டியை மேலும் இறுக்கினார். எனது இரண்டு கால்களும் உடலுடன் இணையயும் ஒரு பகுதியில் பலமாய் வலித்தது, நான் நெளிந்தேன், குனிந்தேன், நிமிர்ந்தேன். வலிக்கிறதா என்று கேட்டபடியே பட்டியை சற்று தளர்த்தினார் பயிட்சியாளர். சென்றுகொண்டிருந்த உயிர் திருப்பியது எனக்கு.


சில பயிட்சிகள் தரப்பட்டன. விமானத்தில் இருந்து பாய்ந்தபின் கை, கால்களை எப்படி வைத்திருப்பது என்றும் விளக்கினார். நானும் என்னை James Bond  போன்று கற்பனை செய்தபடியே பயிற்சிகளைச் செய்தேன்.

அங்கே பார், என்று பயிட்சியாளர் வானத்தைக் காட்டினார். வானத்திலிருந்து பலர் குதித்து பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தனர். தேவர்களும், தேவைதைகளும் முகில்களைக் கடந்துவரும் அந்தக்காலத்து விட்டலாச்சாரியாவின் திரைப்படக்காட்சிகள் போலிருந்தது, அது. அவர்களுக்குள் ”எமன்” தெரிகிறாரா என்று பார்த்தேன். இல்லை போலிருந்தது.

என்னை ஏற்றிச் செல்ல வேண்டிய விமானம் வந்து நின்றது. தங்கை கட்டிப்பிடித்து முத்தமிட்டு அனுப்பினாள். ”அம்மா கிழவியை அன்பாக விசாரித்ததாகச் சொல்” என்று கூறினேன், நக்கலாய். எவ்வளவோ செய்திட்டமாம் இத செய்யமாட்டமா என்று டயாலாக் பேசினாள், அவள்.

அது ஒரு மிகச்சிறிய விமானம். அதில் ஏறினேன். இருக்கைகளை அகற்றி விட்டிருந்தார்கள். நெரிசலான பஸ்ஸில் ஆட்களை ஏற்றுவது போல 15 பேரை ஏற்றினார்கள். எல்லோரும் குந்திக் கொண்டதும் காதடைக்கும் சத்தத்துடன் புறப்பட்டது விமானம்.

எனது பயிட்சியாளர் என்னைப் பார்த்து ”ஓகே”யா? என்பது போல சாடையில் கேட்டார். ஓம் என்றேன். விமானம் மேலெழும்பிக்கொண்டிருந்தது. எனது இதயத்துடிப்பைப் போல.

யன்னலால் எட்டிப் பார்த்தேன் எல்லாம் சிறிதாய் தெரிந்தன. அவை சற்று நேரத்தில்  புள்ளி புள்ளிகளாய் மாறின. விமானம் 10000 அடி உயரத்தை அடைந்ததும் ஆயத்தமாகுமாறு உத்தரவிட்டார் பயிட்சியாளர். விமானத்தின் பின் கதவு திறந்தது. 12000 அடி உயரம் வந்ததும். எல்லோரும் யாய்ந்தனர்.

பயிட்சியாளர் என்னை தன்னுடன் இணைத்துக் கொண்டார். வாசலுக்கு வந்தோம். பயிட்சியாளர் எனக்கு பின்னால் இருந்து தயாரா என்றார். பூலோகத்தை ஒரு தரம் பார்த்தேன். எல்லாம் மிக மிக தூரத்தில் புள்ளிகளாயும் நீல நிறத்திலும் தெரிந்தன. இனி நான் தலைகீழாக நின்றாலும் பயிட்சியாளர் இந்தப் பாய்தலை நிறுத்தமாட்டார் என்பது புரிந்த போது ”ஜம்ப்” என்று கத்தினார் பயிட்சியாளர்.

எனது இரு இளவரசிகளையும் நினைத்துக் கொண்டே பாய்ந்தேன். என்னுடன் ஒட்டியபடியே பயிட்சியாளரும் பாய்ந்தார். விமானத்தில் இருந்து விழுந்துகொண்டிருந்தேன் நான். என்ன நடக்கிறது என்று முளை உணர்வதற்கு சற்று நேரமெடுத்தது. விழும் வேகத்தில் முகத்தில் இருந்த சதைகள் எல்லாம் தள தள என்று ஆடின. நான்  எமன் கண்ணருகில் தெரிகிரானா என்று தேடிக்கொண்டிருந்தேன்.

பயிட்சியாளர் தனது கையில் பூட்டியிருந்த புகைப்படக்கருவியை இயக்கி என்னைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார். சில நொடிகளின் பின்பு பயிட்சியாளர் பரசூட்“இனை இயக்கினார். பயிட்சியாளர் பரசூட் கயிற்றினை இழுத்தபோது வானத்தை நோக்கி எம்மை இழுத்துக் கொண்டு போனது பரசூட். வயிற்றுக்கள் ஏதோ செய்வது போலிருந்தது எனக்கு. சற்று நேரத்தில் அழகாய் விரிந்து மெதுவாய் ஆடி ஆடி இறங்கத் தொடங்கியது.

James Bond ஆக நடித்த அந்தக் காலத்து கதாநாயகன் Roger Moore ஒரு படத்தில் தங்கப்பல்லினைக்கொண்ட வில்லனுடன் இப்படி விமானத்தில் இருந்து பாய்ந்து சண்டை பிடித்தது நினைவில் ஆட, என்னையும் James Bond ஆக நினைத்துக் கொண்டேன்.

எறும்புகள் ஒரு பாதையில் போவது போல மிகச் சிறிதாய் தெரிந்தன வாகனங்களும்,வீதிகளும். பயிட்சியாளர்  என்னை பரசூட்டை இயக்க விட்டார். நானும் சிறுபிள்ளை போல் அதை அங்கும் இங்கும் ஆட்டி இயக்கிப் பார்த்தேன். நாம் இறங்கும் இடம் தூரத்தில் தெரிந்து, மெது மெதுவாய் அருகில் வந்தது.

பயிட்சியாளர் கற்றுத் தந்தது போன்று உனது தொடைகள் இரண்டையும் இரு கைகளாலும் தூக்கிப் பிடிக்,க அவர் மெதுவாக என்னை உயிருடன் பூலோகத்தில் மீண்டும் இறக்கிவிட்டார்.

தங்கை பேயைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் பேய் இல்லை என்று உறுதி செய்து கொண்ட சற்று நேரத்தின் பின் தான் புன்னகைத்தாள்.

பயிட்சியாளருக்கு நன்றி சொல்லி, மறக்காமல் வீடியோவையும் பெற்றுக்ண்டேன். நாம் வீடு திரும்பியபோது  தங்கை ஏதும் பேசாது  காரோடினாள். நான் வானத்தால் விழுந்த அலுப்பில் தூங்கியிருந்தேன்.

என்னை யாராவது ”நீ என்ன வானத்தால விழுந்தவனா” என்று கேட்டால், ஓம் நான் வானத்தால விழுந்தவன் தான் என்று பதில சொல்ல யோசித்திருக்கிறேன்.

இன்றைய நாளும் நல்லதே.



வீடியோ லிங்க்
http://www.facebook.com/video/video.php?v=1158887298742

.

2 comments:

  1. சாதனை வீரனுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்!

    ReplyDelete

பின்னூட்டங்கள்