261 வயது இசைக்கருவியுடன் ஒரு ஞானசூன்யம்

லண்டன் செல்லும் விமானத்தில் குந்தியிருந்தேன்.  எனக்குப் பக்கத்தில் இருந்த இரு இருக்கைகளும் காலியாயிருந்தன. மனம் மிக மகிழ்ச்சியாய் இருந்தது. கணணியை மடியில் வைத்து இயக்கி லண்டன் விமான நிலைய கால நிலையைப் பார்த்தேன். அதிக பனிவீழ்ச்சி காரணமாக விமானநிலையம் காலையில் இருந்து மூடப்பட்டிருந்ததாகவும் தற்போது திறக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் எந்நேரமும் மூடப்படலாம் என்றுமிருந்தது. நான் பிரச்சனையின்றி போய்ச் சேர வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் ஒரு ஆள்  உயரமான வயலீன் போன்றதொரு இசைக்கருவியை அது போன்றதொரு  பெட்டியில் வைத்து துக்க முடியாயாமல் துக்கிக் கொண்டு வந்தார்.

என்னடா இது விசர்த்தனம் என்று நினைத்துக் கொண்டேன். அவர் அதை எப்படி இருக்கைக்கு மேலுள்ள பொதிகள் வைக்குமிடத்தில் வைக்கப் போகிறார் என்று  போசித்தக் கொண்டிருந்த போது என்னருகில் வந்து எனக்கு அருகாமையில் காலியாக இருந்த ஒரு இருக்ககையில் பெரிய வயலினை வைத்தார். அதற்கருகில் இருந்தார்.

இதென்னடா கூத்து.. இவர் ஒரு இருக்கையை வயலினுக்கு கொடுக்கிறார், விமானப் பணிப் பெண்ணும் ஏதும் கதைக்காமல் கடந்து போகிறாளே என்று ஆச்சரியப்பட்டேன்.

விமானி, விமானம் புறப்படப் போகிறது என்றும், ஆனால் நாம்  ”கட்வீக்” விமானநிலையத்தில் இறங்குவது நிட்சயமில்லை என்று பயமுறுத்திக்கொண்டு விமானத்தைக் கிளப்பும் முயற்சியில் மும்மரமாயிருக்கும் போது விமானப்பணிப் பெண் என்னருகில் இருந்தவருக்கு குழந்தைகளை விமான இருக்ககையுடன் இணைக்கும் பட்டி ஒன்றைக் கொடுக்க எனது ஆச்சரியம் அளவு கடந்தது. மனிதர் அதை வாங்கி இருக்கையுடன் அந்த  பெரீய வயலினை இருக்கையுடன் சேர்த்திணைத்தார்.

எனது ஆச்சர்யம் கட்டுக்கடங்காதிருந்தது. மனிதரைப் பார்த்தால் 20 - 23 வயதிருக்கும். சில நாள் தாடியும், என்னை விட மிக மிக அதிகமான தலைமயிருடனும் இருந்தார். நோர்வேஜிய புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்ததால் அவர் நோர்வேஜியன் என்று அறிந்து கொண்டேன்.

எனக்கு சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்குமளவு அறிவு தான் இருக்கிறது. தவிர ஒரு விதமான இசைக்கருவியையும் இசைக்கவோ, மற்றவர்கள் கேட்கும் படியாக பாட்டுப்படிக்கவோ எதுவும் தெரியாத ஒரு ஞானசூன்யம் தான் நான். ஆனால் மனதை மயக்கும் இசையில் கசிந்து கரைந்து போகும் மனம் இருக்கிறது.


தொண்டையை கனைத்துக் கொண்டு இது என்ன பெரிய வயலினா? என்று ஒரு போடு போட்டேன்.  எனது நான்கு சொற்களிலேயே அவர் எனது சங்கீத அறிவை அறிந்து கொண்டது போலிருந்தது  மனிதர் பார்த்த பார்வை.

இது வயலின் பெரிய வயலினும் இல்லை, சிறிய வயலினும் இல்லை என்று சொன்னார். நானும் விடாமல் அப்ப இதற்கு என்ன பெயர் என்றேன். எனது ஆர்வம் மனிதருக்கு பிடித்துப் போயிருக்க வேண்டும்.

இதன் பெயர் ”செல்லோ” (Cello) என்றும், இது மிகவும் பழமையான இசைக்கருவி என்றும் இது வயலினைப் போன்றது என்றும் இதை தனியே இசைக்கவும் முடியும், ஏனைய இசைக்கருவிகளுடன் சேர்ந்தும் இசைக்கலாம் எனவும் இது 1600ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இசைக்கருவி என்று விளக்கினார்.  கோயில் மாடு மாதிரி தலையாட்டினேன். அத்துடன் என்னிடமுள்ள ”செல்லோ” மிகவும் பழமையானது என்றார். எத்தனை வயது இருக்கும் என்று கேட்டேன். 1749ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்றும், தான் அதை அதிக விலை கொடுத்த லண்டனில் நடந்த ஒரு ஏலத்தில் வாங்கியதாகவும்  சொன்னார். அத்துடன் செல்லொ என்னும் சொல் ”வியலான்செல்லலோ” என்னும் இத்தாலிய சொல்லில் இருந்து வந்தது என்றார். சிம்பொனி ஆர்கஸ்ராவில் 8 - 12 பேர்வரை செல்லோ வாசிப்பார்கள் என்றும் சொன்னார்.

இந்த இசைக்கருவியின் அடிப்பக்கம் 2 -3 மில்லிமீற்றர் மொத்தமானது என்றும் அதுவே இதன் இசையின் தரத்தை நிர்நயிக்கிறது என்றும் சொன்னார். தனது ”செல்லோ”வில் சிறு சிறு திருத்தங்கள் செய்திருப்பதாகவும், ஆனால் திருத்த வேவைலைகள் மிகவும் சிரமமானவை என்றார்.

அவரின் பேச்சில் இருந்து அவர் இசை பற்றி மிகுந்த அறிவு உள்ளவர் போலிருந்தது. எனவே உங்கள் தொழில் ”செல்லோ” இசைப்பதா? என்றேன்.  ஆம், இல்லை என்றபடி சிரித்தார். புரியவில்லையே என்றேன். தான் நோர்வேயின் உலகப் பெயர் பெற்ற பல்கலைக்கழகத்தில் (NTNU) இல் செல்லோ பற்றிய ஆராய்ச்சி செய்து வருவதாகவும், அதேவேளை இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பகுதிநேர விரிவுரையாளராக கடமையாற்றுவதாகவும் சொன்னார். ஒரு ஞானசூனியம் ஒரு இசைமேதைக்கு அருகில் உட்கார்ந்திருக்கிறது என எண்ணிக் கொண்டேன். பெருமையாயும் இருந்தது.

இப்போது புரிந்தது ஏன் அவர் அதை இவ்வளவு கவனமாக கையாளுகிறார் என்று. எனது எண்ணத்தை புரிந்து கொண்டவர் போல சொன்னார், இதை விமானப்பொதிகளுடன் அனுப்ப தான் சம்மதிப்பதில்லை என்று. ஏன்? என்றேன்.  பணியாளர்களுக்கு இதன் அருமை புரிவதில்லை எனவே கவனமாகக் கையாள மாட்டார்கள் என்றார். தவிர அதனால் தான் விலை என்றாலும் விமானத்தில் இதற்கென்று ஒரு தனி ஆசனம் ஒதுக்கிக் கொள்கிறேன் என்றார். தயைாட்டினேன். தனது செல்லோவை தான் ஒரு சிறு குழந்தைபோல பராமரித்து வருவதாகக் கூறினார். அதை நானும் அவதானித்தேன் என்றேன். சேர்ந்து சிரித்தோம்.

விமானம் மேலெழும்பி வெள்ளை முகில்களுக்கூடாக பறந்து கொண்டிருந்தது. நான் முதன்   என் வாழ்வில் முதன் முதலில் ஒரு இசைக்கருவின் அருகாமையுடன்  பயணம் செய்கிறேன். எனது இசையறிவின் அளவற்ற ஆழத்தைப் புரிந்து கொண்டது போல அந்த இசைக் கருவி மெளனமாகவே இருந்தது. நானும்  அதன் அருகாமையின் பெருமையை உணர்ந்தபடி, அடிக்கடி அதை கடைக்கண்ணால் பார்த்தபடி பயணித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெட்டியினூடாக ஒரு வித இசை கசிந்து என் காதுகளில் வளிந்தோடுவது போல் இருந்தது. மெதுவாய் கண்ணை மூடிக் கொண்டேன். காற்றில் பறப்பது போலிருந்தது.

விமானம் ”கட்வீக்” இல் இறங்கியது. வெளியில் 10 சென்டிமீற்றர் பனி கொட்டியிருந்தது. இந்த 10 சென்டிமீற்றர் பனி தான் விமானநிலையம் மூடப்படுவதற்கான காரணம் என்று என்னைப் பார்த்துச் சொல்லிச் சிரித்தார். அவரின் நகைச்சுவை புரிந்ததால் நானும் சேர்ந்து சிரித்தேன். நேர்வேயில்  150 சென்டிமீற்றர் பனி கொட்டினாலும் விமான நிலையம் இயங்கிக் கொண்டிருக்கும் என்பதே அவரின் நகைச்சுவையின் கருத்தாய் இருந்தது

விடைபெற்றுக் கொண்டோம். கடவுச்சீட்டு பரிசோதனை நிலையத்தை கடந்த போது நன்பர் தனது முதுகில் ”செல்லோ”வை சுமந்து வந்து கொண்டிருந்தார். அந்தக் காட்சி ஆபிரிக்கப் பெண்கள் தங்கள் குழந்தைகளை முதுகில் சுமந்து திரிவது போலிருந்தது எனக்கு. புன்னகைத்துக் கொண்டேன்.

என்னைச் சுற்றி எப்பவும் ஏதோ வித்தியாசமாய் நடந்து கொண்டே இருக்கிறது. நன்மையாயும், தீமையாயும். இன்றைய அனுபவமும் அப்படியே.

சென்ற வருடமும் இந்த நாட்களில் வாழ்க்கையில் மறக்கவே முடியாத, மறக்கக் கூடாத ஒரு அனுபவம் நடந்தது. வீதியில் போகும் போது மிதிபட்ட அசுத்தத்தைப் போல் அதன் பிசுபிசுப்பு இன்னும் என்னுடன் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் பல வருடங்கள் செல்லலாம் அதை எழுதும் பக்குவம் வர.

எது எப்படியோ? இன்றைய நாள் அழகானதே.


.

8 comments:

  1. பல புதிய விடயங்களை அறிந்து கொண்டேன்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

    ReplyDelete
  2. HALLO SANJAYAN! GREAT....!!! CAN YOU CHANGE YOUR NAME FROM VISARAN TO PUVISARAN...I COULDN'T TOLERATE THIS NAME TO SUCH A WONDERFUL WRITER..NICE PERSON..!!!

    ReplyDelete
  3. அப்படியெனில் உங்கள் இயற்பெயர் sanjayan...? எப்படி கண்டுபிடித்தேன் பார்த்தீர்களா...?

    ReplyDelete
  4. எல்லோர்க்கும் எல்லாமும் தெரிவதில்லை.தெரிய வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால் தெரியாததைத்
    தெரிய முற்படவேண்டும்.
    அது உங்களிடம் உண்டு.
    அந்த இளைஞருக்கு இசையாளனாக இருந்தபோதும்; நம் கடத்தைக் கொடுத்தால் இதில் தண்ணீரா? பிடித்து வைப்பீர்கள் எனக் கேட்டாலும் ஆச்சரியப்படக் கூடாது.ஏனெனில் நமது கட வித்துவான் "விக்கி" விநாயகராம்...அமெரிக்கா சென்றபோது விமான நிலையத்தில் ,அதை ஒரு இசைக்கருவியென நம்பமறுத்து வாசித்துக் காட்டிய பின் மகிழ்ந்து பாராட்டி அனுப்பினார்களாம்.
    உங்கள் எழுத்து ஒரு ஞானசூனியத்தின் எழுத்தல்ல! கூட்டிச் செல்லும் எழுத்து.. அருமையான
    நடை;;

    இந்த இசைக்கருவியை நீங்கள் காணவேஇல்லையா? இதை விடப் பெரிய இதைப்போன்ற இசைக்கருவி
    கொன்ர பாஸ்(Contrabass) என்பார்கள் அதிகம் ஜாஸ் இசையில் "பம் பம் பம்" என ஒலி எழுப்பும்; அதை வெறும்
    விரலால் மீட்டுவார்கள்.

    அந்த இளைஞனின் லண்டன் பனிப் பொழிவைப் பற்றிய நக்கல் எனக்கும் உண்டு; ஸ்கன்டினேவியன் நாடுகள்; இதைப்போல் பலமடங்கு பனிமழையை வெகுலாவகமாக வருடாவருடம் எதிர் கொள்ளுகிறார்கள்.
    இவர்களோ! திண்றுகிறார்கள்.

    ReplyDelete
  5. என்ன அறிவு, புதுசு புதுசா ஒரு ஆசிரியன் போல் இசை கருவியை பத்தி சொல்லி உள்ளீர்கள் ஆனால் பல பயணங்கள் பல புது பாடங்கள் அதிலும் இப்படி மத்தவர்களை கூச்சம் இன்றி பேசி அவர்கள் அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்தல் ஒரு உணர்வு மிக்க விசையம் தொடர்க உங்கள் பனி

    ReplyDelete
  6. அருமையான பதிவு. செல்லோவை இப்பொழுது தமிழில் திரையிசைகளி பயன்படுத்துபவர்கள் ARRம் ஜேம்ஸ் வசந்தனும், சிற்சில இடங்களில் விஜய் ஆண்டனியும் (-இந்த இசைக்கு ஒப்பானதை இதை Keyboardல் கொண்டு வருவார்). விதாவ’வில் கண்ணுக்குள் கண்ணை ஊற்றிப் பாடலின் ஆரம்ப இசை கேட்டுப்பாருங்கள். தமிழில் இப்பொழுது சில வயலின் கலைஞர்களே செல்லோவையும் இசைப்பதால் சொதப்பலாய் அமைகிறது, இதனாலயே ரகுமான், இளையராஜா இருவரும் Live orch போய் விடுகிறார்கள். காரணம், இசைக்கலைஞர்கள் இந்தியாவில் இல்லை, அதாவது முறையாகப் பயின்றவர்கள்

    ReplyDelete
  7. தங்களின் பெயரை மாற்றவேண்டும் என்று நானும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இப்போது இது அனைவரினதும் வேண்டுகோளாக இருக்கின்றது. மீண்டும் இதை மறுபரிசீலனை பண்ணக்கூடாதா?

    ReplyDelete
  8. பின்னூட்டங்களுக்கு நெகிழ்ச்சியான நன்றிகள்.

    பெயர் மாற்றம் பற்றிய பதில்...நான் ஒரு முடிவெடுத்தாஅப்புறமா என் சொல்லலை நனே கேட்க மாட்டேன்.
    ஹி ஹி..
    விசர்களும் மனிதர்கள் தானே. இருந்து விட்டப் போகட்டுமே அந்தப் பெயர்.

    உங்கள் அன்புக்கு நன்றி நண்பர்களே

    ReplyDelete

பின்னூட்டங்கள்