மது வெள்ளத்தில் கனவின் வள்ளங்கள்

எனது அம்மாவுக்கு வயது 80ஐ நெருங்குகிறது. நினைத்த இடத்தில் தூங்கும் கலை கைவந்திருக்கிறது அவருக்கு. விமானநிலையத்தில் எனக்காக காத்திருக்கும் நேரத்தில் இருந்து என்னை வழி அனுப்ப விமானநிலையத்துக்கு வரும் வாகனம் வரை எதிலும், எங்கும், எப்படியும் தூங்கிவிடுகிறார். ஒரு முறை என்னுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு காத்திருந்த நேரத்திரலும் நிம்மதியாக தூங்கியெழுந்தார். அவர் நடக்கும் போதும் தூங்குகிறாரா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது.

எனது பதின்மக்காலங்களில் கூட அம்மா பகலில் ஒரு குட்டித்தூக்கம் போடுவார். அது 10 அல்லது 20 நிமிடங்களாகவே இருக்கும். ஆனால்  ஆழ்ந்த தூக்கம் அது. அதன் பின் மீண்டும் வேகமாக ஓடித்திரிவார்.

இப்போதெல்லாம் எனக்கு பனிக்காலத்தில் தூக்கம் நினைத்தவுடன் வருவதில்லை. கண்கள் மூடப்பட்டிருந்தாலும் மனமும், மூளையும் இயங்கியபடியே இருக்கும். அவையும் கண்ணைப்போல் உறங்கு நிலைக்கு செல்ல தேவைக்கு அதிகமாக நேரத்தை எடுத்துக் கொள்ளுகின்றன. முன்பெல்லாம் படுத்தவுடன் கண்ணும், மனமும், மூளையும் நித்திரையாகிவிடும்.  இப்போதெல்லாம் அப்படியில்லை. பல நாட்கள் இரவு முழுவதும் தூக்கத்துடன் சண்டைபிடித்தபடியே தூங்க முயற்சித்து, தோற்று பின் அடுத்த நாள் முழுவதும் தூக்கக்களைபை சுமந்து திரிந்திருக்கிறேன்.

எனக்கு, நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்தால் தான் கனவு வரும் என்றில்லை. கண்முடியிருக்கும். மனம் விழித்திருக்கும். தொடர்பில்லாத பல பல கனவுகள் கனவுத்திரையில் திரையிடப்பட்டிருக்கும்.

நேற்றிரவு  ஒரு கனவு கண்டேன். நண்பர் ஓருவர் ஒரு முழு Hennessy (cognac) போத்தல் தருகிறார். நான் அண்ணாந்து அதை வாய்க்குள் கவிழ்க்கிறேன். வாயால் வெளியில் வழிந்து நாம் நின்றிருந்த”கார்பெட்” நிலம் நனைகிறது. நான் ஓடிப்போய் துடைக்க துணி எடுத்து வருகிறேன். அப்பொழுது அது பெரு வெள்ளமாய் ஊற்றெடுக்கிறது. பின்பு ஒரு கால்பந்தாட்ட பந்தயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அருகில் உட்கார்ந்திருந்தவரைப் பார்க்கிறேன். அவரை அடையாளம் தெரிகிறது. எனக்கு அறிமுகமானவர் அவர். (இவர் நன்றாக சோம பானம் அருந்தி மிக்க மகிழ்ச்சியாய் காலத்தைக் கடத்துபவர். அதே வேளை கால்பந்திலும் மிகவும் வல்லவர். அவரும் நானும் ஒரே அணியில் கால்பந்து விளையாடியிருக்கிறோம் ஏறத்தாள 15 ஆண்டுகளுக்கு முன்பு)

இந்தக் கனவின் ஊடாகவே இன்றைய காலை விடிந்தது. பல வருடங்களின் பின் ஒரு கனவு என்னை பலமாக பாதித்திருக்கிறது என்னுமளவுக்கு இந் நேரம் வரை அக் கனவைப்பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன், எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏன் இந்தக் கனவு வந்தது? அதுவும் இன்று வரை சோமபானம் அருந்தப்பழகாத எனக்கு? கால்பந்துக்கும் சோமபானத்துக்கும் என்ன தொடர்பு? கால்பந்திலும், சோமபானத்திலும் வல்லுனரான அந் நபர் கனவில் வருவதற்கான காரணம் என்ன?

முன்பெல்லாம் எத்தனையோ விசித்திரமான கனவுகள் கண்டிருக்கிறேன் ஆனால் அவை இந்தளவுக்கு மனதை பாதித்தில்லை. அதற்கான காரணங்களை நான் தேடியதுமில்லை.

ஒரு நாள் நான் பறக்கும் சக்தியை பெற்றுவிட்டது போல் கனவு கண்டேன். ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்துக்கும், மரத்தில் இருந்து மலையுச்சிக்கும் நான் பறந்து கொண்டிருந்தேன். காடுகள், மலைகள், ஆறுகள், ஊர்கள், மனிதர்கள் எல்லாவற்றையும் கடந்து பறந்துகொண்டிருந்தேன். கீழே இருந்து பலர் என்னைப் பார்த்து சிரித்தார்கள். அந்த அனுபவம் ஏகாந்தமாய் இருந்தது, கனவு கலையும் வரை.

சில நாட்களில் ஏதோ ஓரு இடத்திற்குப் போவது போல கனவு வரும். அடுத்து வரும் நாட்களில் நான் கடந்து போகும் ஒரு இடம் கனவில் கண்ட இடம் போல் இருக்கும். அவ்விடத்தின் அமைப்பு, வீதிகள், கட்டங்கள், மனிதர்கள், ஏன் மணம் கூட கனவில் வந்தது போல இருக்கும். அப்படிப்பட்ட தருணங்கள் ஒரு வித மர்மமான உணர்வினையும், பயத்தையும் மனதுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது எனக்கு.

எனது அப்பாவுக்கும் எனக்கும் அதிகமாய் ஒத்துவருவதில்லை. (பார்க்க அப்பா). அவர் இறந்து ஏறத்தாள 30 ஆண்டுகளாகின்றன. சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் அவருடன் கதைத்துக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டேன். நீண்டதொரு கனவு அது. அட்சயா (மகள்) அவரின் மடியில் குந்தியிருந்தியிருக்க நான் அருகில் உட்கார்ந்திருந்தேன். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். அவரின் அருகாமை ஒரு பாதுகாப்பைத் தருவது போலிருந்தது. அந்த கனவுக்கு முன் அப்பாவின் முகம் மறந்துவிட்டிருந்தது எனக்கு. ஆனால் அந்தக் கனவில் மனிதர் அப்படியே இருந்தார். அதே மொட்டை, அதே நரை, அதே முகச்சுருக்கங்கள், அதே சுருட்டு வாசனை. நானும் அவரும் மட்டும் நண்பர்கள் போல் பேசிக்கொண்டிருந்தது மட்டும் வித்தியாசமாய் இருந்தது. அன்றிலிருந்து அப்பாவின் முகம் ஓரளவு ஞாபகத்தில் நிற்கிறது. ஆனால் அவர் கனவில் வருவதை நிறுத்திவிட்டார். என்னுடன் ஒரு நாள் மட்டும் நட்பாய் இருக்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ?

சில கனவுகள் மட்டும் திரும்பத் திரும்ப வருகின்றன. இப்பவும் பல்கலைகழக நுளைவுப்பரீட்சை நெருங்கி வருகிறது, படிக்க வேண்டும், என்னால் படித்து முடிக்க முடியாதிருக்கிறது, இதுவே கடைசித் தடவை பரீட்சை எழுதும் வருடம், அதன் பின் வாழ்க்கை என்னவாகும்... இப்படி பயமுறுத்தும் ஒரு கனவு பல வருடங்களாக அடிக்கடி வந்து போகிறது. இந்தக்கனவில் இருந்து முழித்துக் கொள்ளும் போது மனம் ஆறுதலடையும்.

அந்த பறக்கும் கனவை மட்டும் 3-4 தடவைகள் கண்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஏன் என்று கேட்காதீர்கள். என்னிடம் பதில் இல்லை. ஒரு வேளை அதற்கு ஏதும் உள்ளர்த்தங்கள் இருக்குமோ? கனவுகளை மொழிபெயர்த்துப் பார்க்கம் கதைகளில், சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்றவன் நான்.  எனவே இந்தக் கனவுகளைப் பற்றி நான பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

கனவு மெய்பட வேண்டும் என்னும் வரிகள் ஏனோ மனதுக்கு பிடித்துப்போயிருக்கின்றன. அந்த பறக்கும் கனவு மட்டும் மெய்ப்பட்டால்.......

உங்களுக்கு மேலால் மொட்டை‌யான, கறுப்பான, அழகான, இளைஞன் ஒருவன் பறந்து போனால் எனது கனவு மெய்ப்பட்டுவிட்டது என்று கொள்ளுங்கள்.


இன்றைய நாளும் நல்லதே..



.

4 comments:

  1. எனது அப்பாவிற்கு உங்கள் அம்மாவிட 7 வருடங்கள் அதிகம். அவரும் தூங்கும் நேரம் மிக மிக அதிகம். புத்தகங்கள், பத்திரிகை படிப்பார். முதியவர்களைப் பற்றிப் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.

    எனக்கு கனவுகள் வருவதேயில்லை என முன்பு புழுகிக் கொண்டிருப்பேன். இப்பொழுது வருகிறது. ஆனால் விழித்ததும் மறந்துவிடுகிறேன்.

    விழிப்பிலும் மறதி, கனவிலும் மறதி..

    ReplyDelete
  2. எஸ்,கே என்றொரு பதிவர் இருக்கிறார்... அவரிடம் உங்கள் கனவுகளை கூறினால் அவர் மனோத்தத்துவ விளக்கம் அளிப்பார்... முயற்சி செய்து பாருங்கள்...

    ReplyDelete
  3. 'கறுப்பான,அழகான மொட்டையான இளைஞன் ' என்ற வரி கொஞ்சம் இடிக்கின்றது.'அழகான ', மற்றும் 'இளைஞன்'என்ற இரண்டு வார்த்தைகளையும் தேநீரில் விழுந்த எறும்புகளை மெல்ல அகற்றுவது போல் நீக்கினால் என்ன?[இது தமாஷுக்கு சஞ்சயன்]
    வர வர உங்கள் எழுத்துகளில் மெருகேறி வருகின்றது.இந்தக் கனவுகளின் உலகம் உண்மையிலயே வியப்பைத் தரும் ஒன்றுதான். என்னுடைய அயல் வீட்டுகர்ரர் ஒருவர் சவுதியில் பணி புரிந்த காலத்தில் இறந்து போனதைப் போல ஒரு கனவு கண்டேன்.என்ன ஆச்சரியம். நான் கனவு கண்ட இரண்டாவது நாள்,நிஜத்தில் அவருடைய அகால மரணச் செய்தியை அறியும் துரதிருஷ்டசாலியானேன்.
    வீட்டில் திருவாட்டிக்கு நீங்கள் கட்டளையிடுவது போன்ற இனிய சம்பவங்கள் கனவில் கூட உங்களுக்கு வராதா?
    கனவுக்கும் தணிக்கையா?

    ReplyDelete
  4. தமிழ் பஞ்சாக்கதில கனவுகளின் பலன்கள் இருக்கு. ச்சே!!!இப்ப என்னிடம் இல்லை. இருந்தால் பார்க்கலாம். எல்லாமே நன்மைக்கு என்று நினையுங்கள்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்